சாதி, மதம், ஆணாதிக்கம் என்று எல்லா ஓடுக்குமுறைகளும் கெட்டித்தட்டி கிடந்த நமது சமூகத்தின் பெரு வெடிப்பைப் போல் 60களின் இறுதியில் கிளம்பியவர் தோழர் அஜிதா. மாவோ சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு புடம் போடப்பட்ட அஜிதா கேரள மாநிலத்தில் வயநாட்டின் புல்பள்ளி காவல்நிலையத்தை தாக்கி புரையோடிய இச்சமூகத்தில் ஒரு புயலை ஏற்படுத்தியவர். 18 வயதில் நடுத்தர வர்க்க ஆசைக்கனவுகளில் வாழ்ந்த ஒரு பெண் எப்படி சமூகச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு கம்யூனிச இயக்கத்துக்குள் சென்று, வயநாட்டின் பழங்குடி மக்கள் கிராமங்களில் ஆயுதம் ஏந்திய களப்போராளியாய் மக்கள் படையை தம் சக ஆண்தோழர்களுடன் இணைந்து கட்டியமைக்க முயன்றார். அதில் ஏற்பட்ட பின்னடைவினால் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு கடும் சித்ரவதைக்கும், அவதூறுகளுக்கும் ஆளானார். பின்பு அந்த வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்க பெற்று அஜிதா எட்டு ஆண்டுகள் கேரளாவின் பல்வேறு சிறைகளில் பட்ட துன்பங்களையும், ஒடுக்குமுறைகளையும் தாங்கி அதிலிருந்து எப்படி உறுதிவாய்ந்த கம்யூனிசப் போராளியாய் வெளியே வந்தார் என்பதை விளக்குவதே இந்த நூல்.
இந்த நூல் முழுவதும் மார்ச்சிய-லெனினி தத்துவ படிப்பும், மாவோ சிந்தனைகளும் எப்படி ஒவ்வொரு நெருக்கடிகளிலும் தனக்கும், மற்ற தோழர்களுக்கும் சோர்வை நீக்கி மனவுறுதியை, தைரியத்தை, புத்துணர்வை அளித்தது என்று அஜிதா விரிவாக எழுதி உள்ளார். அடிப்படை தத்துவார்த்த, கோட்பாட்டு நூல்களை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் கற்று தெளிவடைவதும், உழைக்கும் மக்களிடம் இணைந்து செயல்படுவதும் அதற்கு மிகவும் அவசியத்தை என்பதை தனது அனுபவங்களின் மூலம் விளக்குகிறார். வலம், இடது கம்யூனிஸ்ட் கட்சி தலைமைகள் எப்படி தத்துவார்த்த கல்வியை புறக்கணித்தன என்பதையும், அதனால் ஆட்டுமந்தையாய், கிளிப்பிள்ளைகளாய் தோழர்களை உருவாக்கி தங்கள் திரிபுவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதை கடுமையாக அஜிதா விமர்சிக்கிறார். ஒவ்வொரு தோழனுக்கும் தத்துவார்த்தக் கல்வி என்பது அவசியமானது என்பதை தனது அனுபவங்களின் மூலம் நிருபிக்கிறார். மாவோவின் மூன்று தத்துவ கட்டுரைகள், மாவோ மேற்கோள்கள், மாவோவின் இராணுவ படைப்புகள்….. இன்னும் பிற அரசும் தத்துவார்த்த நூல்கள் நெருக்கடியானக் காலங்களில் கலங்கரை விளக்கமாக ஒளிவீசி வழி காட்டியதை எழுதுகிறார்.
60களின் ஆரம்பத்தில் நடந்த குருச்சேவ் திருத்தல் வாதக் கோட்பாடுக்கும், மாவோவின் புரட்சிகர கோட்பாட்டிற்கும் இடையிலான சர்வதேச தத்துவ விவாதங்களையும், அதிலிருந்து உலகெங்கும் பரிணமித்த புரட்சிகர மார்ச்சிய- லெனினிய இயக்கங்களும், இதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும், கேரளாவிலும் புரட்சிகர மக்கள் எழுச்சியும் நக்சல்பாரிஇயக்கமும். மார்ச்சிய- லெனினிய அமைப்பும் எப்படி உருவாகின என்பதை விமர்சனத்துடன் இந்நூல் விளக்குகிறது.
மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களின் திருத்தல்வாத கோட்பாடுகளை இந்த நினைவு குறிப்புகள் அம்பலப்படுத்துவதுடன் புரட்சிகர இயக்கத்தை, விவசாய-பழங்குடி மக்களின் எழுச்சியை எப்படி கேரளாவில் இரத்த வெள்ளத்தில் அடக்குமுறையின் மூலம் மூழ்கடித்தனர் என்பதை விவரிக்கிறார். ஏ.கே.ஜி, அச்சுதமேனன், கருணாகரன் போன்ற சிபிஎம் தலைவர்கள் செய்த பித்தலாட்டங்களை அஜிதா தன் அனுபவங்களின் மூலம் அம்பலப்படுத்துகிறார்.. கடைசிவரையில் அஜிதா என்ற போராளியை சரணடைய செய்ய சிபிஎம் தலைமைகள் செய்த கயமைத்தனங்களை நுட்பமாக அலசி அம்பலபடுத்துகிறார்.
வசந்தத்தின் இடி முழக்கமாய் எழுந்த நக்சல்பாரி எழுச்சியினைப் பற்றி தமிழ்நாட்டில் தோழர்கள் கலியபெருமாள், தியாகி எழுதிய நூல்கள் தமிழில் உள்ளன. ஆனால் தியாகு தனது சிபிஎம் கட்சி திரிபுவாத நிலைபாட்டின் அடிப்படையில் நக்சல்பாரி இயக்கத்தை, மார்ச்சிய- லெனினிய இயக்கங்கத்தைக் கொச்சைப்படுத்துகிறார். ஆனால்..அஜிதாவின் இந்த நூலை கோட்பாடு-அரசியல்ரீதியின் ஊடாக எப்படி மார்ச்சிய லெனினிய இயக்கம் தோன்றியதை அதன் பல்வேறு பிரிவுகளையும் திசைவிலகல்களை கொள்கை அடிப்படையில் விமர்சிக்கிறார்.
எண்ணற்ற தோழர்களின் மக்களின் தியாகங்களை குறிப்பாக பழங்குடி மக்களின் விடுதலைக்காக உயிர்நீத்த தோழர்கள் வர்க்கீஸ், கிஸான்தொம்மன், சாண்டி போன்றவர்கள் ஒளிரும் தியாக வாழ்கையை இந்த குறிப்புகள் நம் கண்முன் காட்சிகளாய் படம் பிடித்து கண்ணீரை வரவைக்கின்றது.
“புல்பள்ளி காவல்நிலைய சுவரில் நக்சலைட் அஜிதாவின் இரத்தம் தோய்ந்த கை அடையாளம்-“என்ற ஆட்சியாளர்களின் போலிசின் பிரச்சாரம் இன்று வரையிலும் தமிழ்நாட்டில் உயிரோடு இருக்கிறது. சிலநாட்களுக்கு முன் மூத்த தோழர் கோவை ஈஸ்வரனுடன் பேசும்பொழுதும் இதை குறிப்பிட்டார் இந்தக் கட்டு கதையை தோழர் கோவை ஈஸ்வரன் கூட உண்மை என்று இன்றும் நம்புவது என்பது ஆச்சரியமாகவும் இருந்தது.. அந்த அளவிற்கு அஜிதா என்ற போராளியை ஆட்சியாளர்கள வெறுத்தனர். கைதான வேறு ஒரு சகதோழரை சித்ரவதை செய்து கையை உடைத்து விட்டு, அவருடைய மறுகையை கொண்டு அவரின் இரத்தத்தில் தோய்த்து காவல்துறை புல்பள்ளி காவல்நிலைய சுவரில் செய்த அடையாளம்தான் அது என்பதை விரிவாக அஜிதா விளக்குகிறார்..... காவல்துறையின், ஊடகங்களின் பொய்யை புரிந்து கொள்ள இந்த ஒரு உதாரணம் போதுமானது.
தோழர் சாருமஜிம்தாரின் தனிநபர் அழிதொழிப்பு பாதைக்கும் தோழர் குன்னிகல் நாராயணின் ஆயுதப்படை பாதைக்கும் இடையிலான கோட்பாட்டு வேறுபாடுகளை கேரள புரட்சிகர இயக்கத்தின் வரலாற்றுடன் இணைத்து விமர்சிக்கினறார். இளம் தோழர்களுக்கு கடந்த கால இந்த வரலாற்றை படிப்பது அவசியம். வரலாற்றில் இருந்த நாம் கற்று தெளிய வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன.
இந்திராகாந்தியின் தேர்தல் தோல்வியால் எமர்ஜென்சி நடைமுறைப் படுத்தப்பட்டதாக குறுகிய வெகுசன பார்வை ஒன்று இன்றும் உள்ளது. அது எப்படி தவறு என்றும், சர்வதேச நெருக்கடி , இந்திய நாட்டின் நெருக்கடி, அதனால் எழுந்த மக்கள் எழுச்சிகளை ஒடுக்கவே 1975யில் எமர்ஜென்சி நடைமுறைப்பட்டதை அரசியல் ரீதியாக விளக்குகிறார்.
கேரளாவில் சிறைச்சாலைகள் குறிப்பாக பெண்கள் சிறைச்சாலை மனிதாபிமானமற்ற, சனநாயகத் தன்மையற்ற அடக்குமுறை கூடங்களாக போலி கம்யுனிஸ்ட் கட்சிகளின் ஆட்சியிலும் இருந்ததை அஜிதா விமர்சிக்கிறார். இந்த அடக்குமுறைகளை விட அதிகமான ஒடுக்குமுறை தமிழ்நாட்டின் சிறைச்சாலைகள் அப்பொழுதும் இப்பொழுதும் இருக்கின்றன. பெண்கள் சிறைச்சாலையில் இருந்த விளிம்பு நிலை பெண்கள் சிலரின் வாழ்க்கைகளை அஜிதா விவரிக்கும்பொழுது இப்படியும் ஒரு காட்டுமிரண்டிதனமான காலத்திலா நாம் வாழ்கின்றோம் என்று திகைத்து போகின்றொம்….
இந்த நூல் முழுவதும் ஒடுக்கப்படும் மக்கள் எப்படி புரட்சியை நேசிக்கிறார்கள், சமரசமற்ற போராளிகளை உறுதுணையாக இருக்கின்றார்கள் என்று பல நிகழ்வுகளை நினைவூட்டுகிறார்..
இறுதியாக நேசத்திற்குரிய மாவோ சிந்தனைகள், கோட்பாடுகள் எப்படி தனக்கு வழிகாட்டும் ஒளிதீபமாய் ஒளிர்ந்ததை தோழர் அஜிதா பல சம்பவங்கள் வாயிலாக கண்முன் நிறுத்துகிறார். மக்களை நேசிக்கும், புரட்சியை விரும்பும், சனநாயக மாண்புகளை உயர்த்தி பிடிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது!
இதை தமிழில் மொழியாக்கம் செய்த குளிச்சல் மு.யூசுப் அவர்களின் சரளமான மொழிநடை இந்த நூலுக்குள் நம்மை அய்க்கிப்படுத்தி விடுகின்றது.
எதிர் வெளியீடு, பொள்ளாச்சி. விலை ரூ275/-